முறைகேடு நடப்பதாக புகார்: திம்மம்பட்டி ஊராட்சியில் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு
முறைகேடு நடப்பதாக புகார் வந்த திம்மம்பட்டி ஊராட்சியில் மாவட்ட உதவி இயக்குனர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குளித்தலை,
திம்மம்பட்டி ஊராட்சி
குளித்தலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது திம்மம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர். அதுபோல் இந்த ஊராட்சி தலைவர் செல்வி என்பவரின் கணவர் முருகன் தொலைபேசியில் மிரட்டும் தோணியில் சிலரிடம் பேசிய ஆடியோ பதிவை இப்பகுதியை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தனர்.
அதுபோல் ஊராட்சியின் நிர்வாக குறைபாடுகள் குறித்தும், ஊராட்சி தலைவரின் கணவர் முருகன் தொலைபேசியில் மிரட்டும் தோணியில் பேசியதாக கூறப்படும் ஆடியோவையும் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
மாவட்ட உதவி இயக்குனர் திடீர் ஆய்வு
இந்தநிலையில் மாவட்ட உதவி இயக்குனர் ஊராட்சிகள் விஜய்சங்கர் இந்த ஊராட்சி அலுவலகத்திற்கு நேற்று திடீரென வந்திருந்தார். அவருடன் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் வந்திருந்தனர். அதிகாரிகள் வந்ததை பார்த்த இப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு கூடினர். தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி செயலாளர் ஆகியோர்களை உதவி இயக்குனர் விஜய்சங்கர் சந்தித்து சென்றார். அதிகாரிகளின் திடீர் வருகையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.