ரூ.30 கோடியே 95 லட்சத்தில் கடன் உதவி
திருவாரூரில் 1029 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30 கோடியே 95 லட்சம் மதிப்பில் கடன் உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.
திருவாரூர்;
திருவாரூரில் 1029 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30 கோடியே 95 லட்சம் மதிப்பில் கடன் உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.
கடன் உதவி
திருவாரூர் ஒன்றியம் தண்டலை ஊராட்சியில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. , மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி 1029 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30 கோடியே 95 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக அரசு கடந்த 1989 ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
பொருளாதார மேம்பாடு
முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில் தொடங்க வங்கி கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக்குழு இயக்கம் வலுப்பெற்று வருகிறது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி பெண்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெய்வநாயகி, ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா, ஒன்றியக்குழு தலைவர்கள் திருவாரூர் தேவா, நீடாமங்கலம் செந்தமிழ்செல்வன், கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்திரன், திருவாரூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தியாகராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.