போலி திமிங்கல உமிழ்நீர் கட்டியை விற்க முயன்ற 2 பேர் கைது
மார்த்தாண்டம் அருகே போலி திமிங்கல உமிழ்நீர் கட்டியை விற்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே போலி திமிங்கல உமிழ்நீர் கட்டியை விற்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரூ.21 லட்சம் விலைக்கு பேசினர்
தக்கலை அருகே உள்ள கீழ்கல்குறிச்சியை சேர்ந்தவர் ராஜேஷ் ராஜா (வயது40). இவரிடம் நெல்லை மாவட்டம் மாவடி ராமச்சந்திரபுரத்தை சேர்ந்த சுபாஷ் (27), நாங்குநேரி டோனாவூரைச் சேர்ந்த மிக்கேல் ரானே (50) ஆகியோர் அணுகி தங்களிடம் திமிங்கல உமிழ்நீர் கட்டி இருப்பதாக கூறினர். மேலும், ரூ.21 லட்சம் கொடுத்தால் தருவதாக விலை பேசியுள்ளனர். அத்துடன் ஏதோ ஒரு பொருளை கொடுத்து முதற்கட்டமாக ரூ.10 ஆயிரம் வாங்கி சென்றுள்ளனர். தொடர்ந்து மீண்டும் அவரை ஏமாற்றி பணம் பறிக்க முயன்றுள்ளனர்.
ஆனால், அவர்கள் மீது சந்தேகம் கொண்ட ராஜேஷ் ராஜா இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தார். அந்தபுகாரின் அடிப்படையில் தனிப்பிரிவு போலீசார், 2 பேரையும் கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதற்காக 2 பேரையும் திமிங்கில உமிழ்நீர் கட்டிகளுடன் மார்த்தாண்டம் அருகில் உள்ள சிராயன்குழி தம்பிரான் குளம் அருகில் வரவழைக்கும்படி ராஜேஷ் ராஜாவிடம் கூறினார்கள்.
சுற்றி வளைத்து பிடித்தனர்
சம்பவத்தன்று மாலையில் சுபாசும், மிக்கேல் ரானேயும் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தனர். அவர்கள் கையில் திமிங்கல உமிழ் நீர் கட்டி என்று கூறிய பொட்டலமும் இருந்தது. அவர்களை ராஜேஷ் ராஜா சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு மறைந்து இருந்த தனிப்பிரிவு போலீசார் அவர்களை சுற்றிவளைத்து 2 பேரையும் பிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் திமிங்கல உமிழ்நீர் என்று கூறி வைத்திருந்தது போலி பொருள் என்றும், அது வாசனை பொருளான குந்திரிகம் சாம்பிராணி என்றும் அதனுடன் ஜவ்வாது கலந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்த போலி திமிங்கல உமிழ்நீர் கட்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து சுபாஷ், மைக்கேல் ரானே மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.