கோழியை திருடியதாக கூறி தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது
நச்சலூர் அருகே கோழியை திருடியதாக கூறி தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நச்சலூர்,
கோழி திருட்டு
கரூர் மாவட்டம் நச்சலூர் அருகே உள்ள நெய்தலூர் காலனி அண்ணா நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 36), கூலிதொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு மனைவி, அக்காள், சித்தியுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த மதியழகன் மகன் வினோத்குமார் (29) மணிகண்டனை பார்த்து எப்படி எங்கள் வீட்டு கோழியை திருடலாம்? என்று கேட்டுள்ளார். அதற்கு நான் கோழியை திருடவில்லை என மணிகண்டன் கூறியுள்ளார்.
கத்திக்குத்து
இதையடுத்து வினோத்குமார் தகாத வார்த்தைகளால் திட்டிதான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டன் கழுத்து, தலைப்பகுதியில் குத்தி காயப்படுத்தியுள்ளார். மேலும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதில் காயமடைந்த மணிகண்டன் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.