பரமத்தி அருகே கொலை செய்ய திட்டம் தீட்டிய 5 பேர் சிக்கினர்-கார், பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
பரமத்தி அருகே கொலை செய்ய திட்டம் தீட்டிய 5 பேர் போலீசில் சிக்கினர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பரமத்திவேலூர்:
5 பேர் சிக்கினர்
பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன், பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ், யுவராஜ், மோகன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பரமத்தியிலிருந்து பில்லூர் செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் ஒரு கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள் நின்றதை கவனித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் உடனடியாக அந்த இடத்துக்கு சென்று கண்காணித்தபோது, மறைவான பகுதியில் ஒரு கும்பல் பேசிக்கொண்டு இருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்தனர். அப்போது கும்பலை சேர்ந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். 5 பேர் போலீசில் சிக்கினர்.
பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அங்குள்ள கோரை பாய் குடோனில் கொள்ளை அடிக்க வந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் வந்த காரில் சோதனை செய்தனர். அப்போது காரில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் ஆயுதங்களையும், கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் பிடிபட்ட 5 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரித்தனர். அதில் அவர்கள் மதுரை மாவட்டம் விளாங்குடியை சேர்ந்த கருப்பண்ணன் மகன் திருப்பதி (வயது 19), கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த முத்துகுமார் மகன் கோபிநாத் (23), பரமத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த மகேந்திரன் மகன் ஸ்டீபன்ராஜ், அதே பகுதியை சேர்ந்த சச்சிதானந்தம் மகன் ஹேமந்த்குமார் (21), விஸ்வலிங்கம் மகன் சுனாமி என்கிற விஜயகுமார் (32) என்பதும் தெரியவந்தது.
பரபரப்பு
மேலும் அவர்கள் பணத்திற்காக கொலை செய்யவும், கொள்ளை அடிக்கவும் திட்டம் தீட்டி வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
பரமத்தி அருகே கொலை செய்ய திட்டம் தீட்டிய 5 பேர், பயங்கர ஆயுதங்களுடன் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.