வேடசந்தூர் அருகே 4 வழிச்சாலையில் கவிழ்ந்த லாரி
வேடசந்தூர் அருகே 4 வழிச்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் அருகே உள்ள ம.மு.கோவிலூரில் இருந்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் நூற்பாலைக்கு நூல் பண்டல்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஈரோடு மாவட்டம் லக்காபுரத்தை சேர்ந்த சிவா (வயது 25) என்பவர் ஓட்டினார். அவருடன் அதே ஊரை சேர்ந்த சதீஷ் (22) என்பவர் உதவியாக சென்றார்.
திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே காக்காத்தோப்பு பிரிவு பகுதியில் அந்த லாரி வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் தாறுமாறாக ஓடிய லாரி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியில் வந்த டிரைவர் சிவா மற்றும் சதீஷ் ஆகியோர் காயமடைந்தனர். லாரி கவிழ்ந்த உடனேயே அவர்கள் 2 பேரும் முன்பக்கம் உடைந்த கண்ணாடி வழியாக வெளியேறினர். லாரி கவிழ்ந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பின்னர் விபத்தில் காயமடைந்த சிவா, சதீசை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து சாலையில் கவிழ்ந்த லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திண்டுக்கல்-கரூர் 4 வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.