கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் ரெயில்மோதி பலி
காட்பாடி, திருப்பத்தூர் ரெயில் நிலையங்கள் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜோலார்பேட்டை
காட்பாடி, திருப்பத்தூர் ரெயில் நிலையங்கள் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தொழிலாளி பலி
வேலூர் விருப்பாச்சிபுரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவரது மகன் சரவணன் (வயது 31). கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் மது போதையில் காட்பாடி ரெயில் நிலையம் அருகே உள்ள யார்டு பகுதியில் நேற்று முன்தினம் இரவு தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவர்
இதே போன்று திருப்பத்தூர் அருகே உள்ள மருத்துவர் நகர் பகுதியை சேர்ந்த பிச்சாண்டி மகன் பிரசாந்த் (21). இவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் திருப்பத்தூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சென்று பிரசாந்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.