தாறுமாறாக சென்ற வாகனங்களால் மூலக்குளம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு
தாறுமாறாக சென்ற வாகனங்களால் மூலக்குளம் சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
மூலக்குளம், டிச.
தாறுமாறாக சென்ற வாகனங்களால் மூலக் குளம் சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
சாலைகள் சேதம்
புதுவையில் பெய்த தொடர் மழை காரணமாக பிரதான சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இந்த சாலைகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தற்போது பள்ளிகள் திறக்கப் பட்டுள்ளதால் காலை, மதியம், மாலை வேளைகளில் நகரின் முக்கிய சந்திப்புகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து செல்வதை காண முடிகிறது.
இந்தநிலையில் புதுச்சேரி - மூலக்குளம் மெயின் ரோடு சந்திப்பு பகுதியில் உள்ள ரெட்டியார்பாளையம் மெயின் ரோடு மற்றும் குண்டுசாலை சந்திப்பில் நேற்று காலை 8 மணியளவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாணவர்கள் தவிப்பு
பள்ளி, கல்லூரி மாணவர்களை ஏற்றிச்செல்ல வாகனங்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் ஒரே நேரத்தில் அப் பகுதியில் குவிந்தனர். அவர்கள் முந்திச்செல்வதில் முனைப்பு காட்டி தாறுமாறாக சென்றதால் மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் அந்த பகுதியில் உள்ள குண்டுசாலை, பெரம்பை, அரும்பார்த்த புரம் ஆகிய சாலைகள் வழியாக வாகன ஓட்டிகள் போக முயன்றனர். அந்த சாலைகளிலும் அதிகபடியான வாகனங்களால் நெரிசல் ஏற்பட்டது. இதனால் உரிய நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியால் மாணவர்கள் தவித்தனர்.
கூடுதல் போலீசார் தேவை
இதுபற்றி தகவல் அறிந்த வடக்கு பகுதி போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் புனித ராஜ், ரெட்டியார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையிலான போலீசார் வாகனங்களை ஒழுங்குப்படுத்தினர். சுமார் 1 மணிநேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.
தினந்தோறும் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க காலை, மாலை வேளையில் கூடுதல் போலீசார் வாகனங்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.