வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு

வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு

Update: 2021-12-14 15:59 GMT
ஊட்டி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வாக்கு எண்ணும் மையங்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதா என்பது குறித்து கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார்.

உள்ளாட்சி தேர்தல் 

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த 9-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. 
நீலகிரி மலை பிரதேசம் என்பதால் வாக்குப்பதிவுக்கு பின் வாக்குப்பதிவு எந்திரங்களை ஒரே இடத்துக்கு கொண்டுவர இடர்பாடுகள் உள்ளன. மேலும் வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்க வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

13 மையங்கள் 

அதன்படி கூடலூர் நகராட்சி, ஓவேலி பேரூராட்சி ஆகிய இடங்களுக்கு கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சிகளுக்கு மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மற்ற இடங்களில் தனித்தனியாக வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. 

மொத்தம் 13 மையங்களில் வார்டுகள் வாரியாக மேஜைகள் போடப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவுக்கு பின் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு சீல் வைக்கவும், வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் முன்னிலையில் எண்ணவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் நேற்று நீலகிரி கலெக்டர் எஸ்.பி.அம்ரித் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஊட்டி நகராட்சிக்கு வாக்கு எண்ணும் மையமான ரெக்ஸ் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கேத்தி பேரூராட்சி வாக்கு எண்ணும் மையமான சாந்தூர் சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியை ஆய்வு மேற்கொண்டார். 

ஆய்வின்போது நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், பேரூராட்சி களின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) சீனிவாசன், ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்