நகைக்காக மூதாட்டி அடித்து கொலை

நகைக்காக மூதாட்டி அடித்து கொலை

Update: 2021-12-14 15:49 GMT
ஊட்டி

குன்னூர் அருகே நகைக்காக மூதாட்டியை அடித்துக் கொன்று தப்பிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

மூதாட்டி 

நீலகிரி மாவட்டம் குன்னூர் கேத்தி அருகே தேனலை என்ற கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சன். இவருடைய மனைவி ருக்கு (வயது 68). கடந்த சில மாதங்களுக்கு முன்பு நஞ்சன் இறந்து விட்டதால், ருக்கு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது மகன் ரவிக்குமார் கோவையில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார். 

அவர் தினமும் செல்போனில் தாயை தொடர்பு கொண்டு பேசி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தொடர்பு கொண்ட போது, மூதாட்டி செல்போனை எடுக்கவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினரை தொடர்பு கொண்டு ருக்குவை பார்க்க கூறினார்.

இறந்து கிடந்தார் 

அப்போது கதவு பூட்டி கிடந்தது. பலமுறை அவர்கள் கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால் அவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது, வீட்டுக்குள் மூதாட்டி இறந்து கிடந்தார். இதுகுறித்து கேத்தி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ருக்குவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். 

மூதாட்டி கொலை

அதில், வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த நகையை கொள்ளையடிக்க முயன்று உள்ளது. இதை அவர் தடுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல் மூதாட்டியை அடித்து காயப்படுத்தி விட்டு, கம்மல், மோதிரத்தை கொள்ளையடித்து தப்பிச்சென்றது. 

இதில் மூதாட்டி கழுத்து, மூக்கு உள்ளிட்ட இடங்களில் காயம் அடைந்த ருக்கு பரிதாபமாக உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மர்ம கும்பலுக்கு வலைவீச்சு 

இது குறித்து போலீசார் கூறும்போது, ருக்கு வீட்டில் தனியாக இருப்பதை நோட்டம் விட்ட கும்பலை சேர்ந்த மர்ம ஆசாமிகள், வீட்டிற்குள் புகுந்து அவரை கொலை செய்துவிட்டு நகையை கொள்ளையடித்து உள்ளனர். எனவே இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

அத்துடன் ஊட்டியில் உள்ள நகைக்கடையில் நகையை யாரும் கொடுத்து பணம் வாங்க வந்தார்களா என்பது குறித்தும் ரகசிய விசாரணை நடத்தி வருகிறோம். அத்துடன் தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறோம் என்றனர். 

மேலும் செய்திகள்