மறியல் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் 126 பேரை போலீசார் கைது செய்தனர்

மறியல் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் 126 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-12-14 15:44 GMT
உடுமலை, 
உடுமலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் 126 பேரை போலீசார் கைது செய்தனர்.
மறியல் 
மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 என்பதை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். கடும் ஊனம் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 என்பதை ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். வீடு இல்லாத மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். ஆர்.டி.ஓ. தலைமையில் மாதம்தோறும் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் வழங்குவதில் உள்ள முறைகேடுகளை கலைந்து, அரசின் நெறிமுறைகளை வெளிப்படைத் தன்மையோடு செயல்படுத்த வேண்டும்.
நூறு நாள் வேலை திட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் வேலை வழங்கி, சட்டப்படியான கூலியை சரியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் உடுமலை தாலுகா அலுவலக வளாக பிரதான நுழைவு வாயில் முன்பு நேற்று மறியல் போராட்டம் நடந்தது.
 126 பேர் கைது
 போராட்டத்திற்கு சங்க மாவட்ட துணை செயலாளர் ஏ.மாலினி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் எஸ்.குருசாமி முன்னிலை வகித்தார்.மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட 51 பெண்கள் உள்பட 126 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்