தண்ணீர் திறப்பு குறைப்பு எதிரொலி மீண்டும் 142 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்

தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் மீண்டும் 142 அடியை எட்டியது.

Update: 2021-12-14 11:42 GMT
கூடலூர்:
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கிவருகிறது. 152 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. அதன்படி கடந்த மாதம் 30-ந்தேதி அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. அதன்பிறகு இந்த மாதத்தில் (டிசம்பர்) கடந்த 2, 5, 6, 9, 10, 11, 12, 14-ந்தேதி ஆகிய நாட்களில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியிலேயே நிலைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பொழிவு குறைந்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,146 கனஅடியிலிருந்து 1,023 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 141.95 அடியாக குறைந்தது. மேலும் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு நேற்று முன்தினம் முதல் 1,867 கன அடியிலிருந்து 700 கன அடியாக குறைக்கப்பட்டது. 
இந்தநிலையில் தண்ணீர் திறப்பை விட நீர்வரத்து அதிகம் இருந்ததால் முல்லைப்பெரியாறு அணை நேற்று மீண்டும் 142 அடியாக உயர்ந்தது. கேரளாவுக்கு வினாடிக்கு 144 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்