கோவில் காவலாளியை கட்டிப்போட்டு உண்டியல் பணம் ரூ.4 லட்சம் கொள்ளை
ஹரப்பனஹள்ளி அருகே கோவில் காவலாளியை கட்டிப் போட்டுவிட்டு உண்டியலை உடைத்து ரூ.4 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சிக்கமகளூரு: ஹரப்பனஹள்ளி அருகே கோவில் காவலாளியை கட்டிப் போட்டுவிட்டு உண்டியலை உடைத்து ரூ.4 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
காவலாளியை கட்டிப்போட்டு...
விஜயநகர் மாவட்டம் ஹரப்பனஹள்ளி அருகே எரபாலு கிராமத்தில் உடுச்சாலம்மா அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் எரபாலு மற்றும் சுற்றுவட்டார மக்கள் வழிபட்டு வருகின்றனர். நேற்றுமுன்தினம் இரவு பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிவிட்டு பூசாரி வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்த கோவிலில் காவலுக்கு 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மட்டும் இருந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் கோவிலுக்குள் மர்மநபர்கள் 3 பேர் புகுந்துள்ளனர். அவர்கள், கோவில் முன்பு படுத்து தூங்கி கொண்டிருந்த முதியவரின் வாயில் துணியை திணித்தனர். பின்னர் அவரது கை, கால்களை கயிற்றால் கட்டிப்போட்டனர். இதனால் முதியவரால் கத்தி கூச்சலிடவும், நகரவும் முடியவில்லை.
உண்டியல் பணம் கொள்ளை
இதையடுத்து மர்மநபர்கள், கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த காசு, பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். நேற்று அதிகாலை வழக்கம்போல் கோவிலுக்கு பூசாரி வந்தார். அப்போது அவர், கோவிலில் காவலுக்கு படுத்திருந்த முதியவர் வாயில் துணி திணிக்கப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், உண்டியல் உடைக்கப்பட்டு பணம் மாயமாகி இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர், முதியவரின் வாயில் இருந்த துணியை எடுத்ததுடன் கை, கால்களில் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டார். இதைதொடர்ந்து முதியவர், பூசாரியிடம் நடந்த விஷயத்தை கூறினார்.
வலைவீச்சு
இதையடுத்து பூசாரி கொடுத்த புகாரின் பேரில் எரபாலு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்ப நாயை வரவழைத்து சோதனை நடத்தினர். நாய், கோவிலில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் வந்து கோவிலில் பதிவான மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கோவில் உண்டியலில் ரூ.4 லட்சம் பணம் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து எரபாலு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.