டிரைவர் காப்பாற்றிய குரங்கு சிகிச்சை பலனின்றி சாவு

டிரைவர் காப்பாற்றிய குரங்கு சிகிச்சை பலனின்றி செத்தது.

Update: 2021-12-13 20:28 GMT
பெரம்பலூர்:

மூச்சுக்காற்றை செலுத்தி...
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, ஒதியம் சமத்துவபுரத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வழி தவறி வந்த ஒரு குரங்கை நாய்கள் தூரத்தி கடித்தன. இதனால் காயமடைந்து பயந்த நிலையில் மரத்தில் ஏறி நின்ற குரங்கு உயிருக்கு போராடியது. இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த கார் டிரைவர் பிரபு அந்த குரங்கை மீட்டு குடிப்பதற்கு தண்ணீர் கொடுக்க முயன்றார். ஆனால் குரங்கு மயக்க நிலைக்கு சென்றது.இதனால் மனிதனுக்கு அளிக்கும் முதலுதவி சிகிச்சை போல், பிரபு அந்த குரங்கின் நெஞ்சில் கை வைத்து அழுத்தியதோடு, வாயோடு வாய் வைத்து தனது மூச்சுக்காற்றை செலுத்தினார். இதனால் அந்த குரங்குக்கு மயக்கம் தெளிந்தது.
பரிதாபமாக செத்தது
பின்னர் அந்த குரங்கை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குரங்குக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து வனத்துறையினர் கட்டுப்பாட்டில் குரங்குக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த குரங்கு பரிதாபமாக செத்தது. இதையடுத்து அந்த குரங்கின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.
பெண் குரங்கு
இதுகுறித்து கார் டிரைவர் பிரபு கூறுகையில், குரங்கில் இருந்து மனிதன் தோன்றியதாக கருதுவதை நம்புகிறேன். அதனால் தான் உயிருக்கு போராடிய அந்த குரங்கை மீட்டு எனது மூச்சுக்காற்றை செலுத்தி காப்பாற்றினேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துக்கொண்ட முதலுதவி பயிற்சி எனக்கு அப்போது பயன்பட்டது. அந்த குரங்கு பெண் குரங்கு. எனக்கு 2 மகன்கள் தான் உள்ளனர். பெண் குழந்தை இல்லாததால், அந்த பெண் குரங்கை எனது மகள் போல் எண்ணி காப்பாற்றினேன். அந்த குரங்குக்கு மயக்க நிலை தெளிந்தபோது எனது உடலை கட்டி பிடித்து கொண்டது. தற்போதும் அந்த உணர்வு அப்படியே உள்ளது. ஆனால் அந்த குரங்கு சிகிச்சை பலனின்றி செத்தது குறித்தும், அதனை அடக்கம் செய்தது குறித்தும் வனத்துறையினர் என்னிடம் தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது என்று கண்ணீர் மல்க கூறினார்.

மேலும் செய்திகள்