குவிந்து கிடக்கும் குப்பைகள்
ஈரோடு சூளை முதலிேதாட்டம் எல்.வி.ஆர்.காலனி அருகே உள்ள ரோட்டில் பலர் குப்பைகளை போட்டு சென்று விடுகிறார்கள். இதனால் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுகிறது. காற்று வீசும் போது குப்பைகள் பறந்து வீட்டுக்குள் வந்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருள்மொழி, ஈரோடு.
பழுதடைந்த ரோடு
அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசத்தில் இருந்து காட்டுப்பாளையம் செல்லும் ரோடு பழுதடைந்து மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அந்த ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. எனவே பழுதடைந்து உள்ள ரோட்டை சீரமைத்து கொடுக்க வேண்டும்.
சின்னண்ணன், அந்தியூர்.
தேங்கி கிடக்கும் சாக்கடை
ஈரோடு சூரம்பட்டிவலசு ராஜாஜி தெருவில் குடிநீர் குழாய் அமைக்க குழி தோண்டினார்கள். அப்போது தோண்டப்பட்ட மண் சாக்கடையில் விழுந்துவிட்டது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இதில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பல்வேறு ெதாற்று நோய்கள் உருவாகும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள் ராஜாஜி தெருவில் தேங்கியுள்ள சாக்கடையை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பொதுமக்கள், சூரம்பட்டிவலசு.
குறுகிய ரோட்டால் விபத்து
ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் ரோடு குண்டும்-குழியுமாக உள்ளது. மேலும் ஆக்கிரமிப்பு காரணமாக ரோட்டில் பரப்பளவு குறுகிவிட்டது. அதனால் அந்த ரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்தவழியாகத்தான் பள்ளிக்கூட வாகனங்களும் சென்று வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குண்டும், குழியுமான ரோட்டை சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள், வீரப்பன்சத்திரம்.
பள்ளத்தை சரிசெய்வார்களா?
சென்னிமலை அருகே பெருந்துறை ஆர்.எஸ். ெரயில்வே நுழைவு பாலத்தின் கீழ் தார்சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. இங்கு அதிக அளவில் பள்ளம் ஏற்பட்டதால் தண்ணீர் நிரம்பி நிற்கிறது. இந்த வழியே இரவு, பகலாக எந்த நேரமும் போக்குவரத்து நடைபெறும். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ெரயில்வே நுழைவு பாலம் அடியில் உள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும்.
கே.ராஜேஷ்குமார், சென்னிமலை.
குட்டையில் இறைச்சி கழிவுகள்
புஞ்சை புளியம்பட்டி மாதம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட செட்டிகுட்டையில் கோழி இறைச்சி கழிவுகளை கொண்டுவந்து கொட்டுகிறார்கள். பல ஆண்டுகளுக்கு பிறகு செட்டிகுட்டையில் மழையால் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதுபோல் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதால் தண்ணீர் மாசுபடுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனே இதை தடுக்க வேண்டும்.
நாதன், புளியம்பட்டி
வாகன ஓட்டிகள் அவதி
வெள்ளோடு மாரியம்மன் கோவில் அருகில் பஸ் நிறுத்தம் பகுதியில் அனுமன்பள்ளி பிரிவு தார்சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த வழியே தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலை மோசமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக இந்த ரோட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.பன்னீர்செல்வம், சென்னிமலை.