நடிகர் புனித் ராஜ்குமாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்க மத்திய அரசுக்கு கர்நாடக அரசு பரிந்துரை
கர்நாடக சட்டசபையில் நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
இரங்கல் தீர்மானம்
கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் நேற்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் காகேரி, இரங்கல் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இரங்கல் தீர்மானத்தின் மீது நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் புனித் ராஜ்குமார் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
நடிகர் புனித் ராஜ்குமார், 46 வயதிலேயே நம்மை விட்டு சென்றுவிட்டார். அவர் குழந்தையாக இருந்தபோதே தனது திறமையை வெளிப்படுத்தியவர். குழந்தை பருவத்தில் 14 படங்களில் நடித்தார். அவர் 10 வயதாக இருந்தபோது "பெட்டத ஹூவு" படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. அவரது பண்புகள் மிக சிறப்பானவை.
அஞ்சலி செலுத்தினர்
சாதனையாளர்களுக்கு ஆயுட்காலம் குறைவு என்று நினைக்க தோன்றுகிறது. எல்லா துறைகளிலும் திறமைக்கு இவ்வாறு தான் ஆயுட்காலம் குறைவாக இருப்பது போல் தெரிகிறது. புனித் ராஜ்குமாரின் மரணம் நம்ப முடியாதது. அவரது உடல்நிலை சரியில்லை என்று தகவல் கிடைத்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றேன். நான் செல்வதற்குள் அவர் இறந்துவிட்டார்.
அவரது குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் புனித் ராஜ்குமாரின் இறுதிச்சடங்குகள் நிறைவேற்றப்பட்டன. அதன் காரணமாக எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை. போலீஸ், பெங்களூரு மாநகராட்சி உள்பட அனைத்து துறைகளின் அதிகாரிகளும் சிறப்பான முறையில் பணியாற்றினர். அவரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
திறமையான நடிகர்
ஒரு நடிகர், மக்களின் மனதில் குறுகிய காலத்தில் இவ்வளவு ஆழமாக இடம் பிடிக்க முடியுமா? என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக உள்ளது. அந்த அளவுக்கு அவருக்கு அதிகம் பேர் வந்து அஞ்சலி செலுத்தினர். அவர் ஏழை மக்களுக்கு உதவிகளை செய்தார். போட்டி தேர்வுகளில் இளைஞர்களுக்கு வழிகாட்ட ஒரு செல்போன் செயலியை அறிமுகம் செய்தார். வன உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக ஒரு ஆவண படத்தை எடுத்துள்ளதாகவும், அதை நான் வெளியிட வேண்டும் என்றும் என்னிடம் புனித் ராஜ்குமார் கேட்டுக்கொண்டார். அவர் மறைந்த தினத்தன்று என்னை சந்திக்க நேரம் ஒதுக்கி கொடுத்தேன்.
ஆனால் அவர் அதற்குள்ளேயே இறந்துவிட்டார். ஒரு திறமையான நடிகரை நாம் இழந்துவிட்டோம். அவரது மறைவால் கலை, கல்வி, பின்தங்கிய பிரிவினருக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அவரது திறமையை கண்டு நாங்கள் அவருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்க முடிவு செய்துள்ளோம். இந்த விருது வழங்குவதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளோம். அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
சித்தராமையா பேச்சு
அதைத்தொடர்ந்து சித்தராமையா பேசியதாவது:-
நடிகர் புனித் ராஜ்குமார் 46 வயதிலேயே மரணம் அடைந்துவிட்டார். அவர் தனது குறுகிய காலத்தில் மக்களின் அன்பை சம்பாதித்துள்ளார். அவரது உடலுக்கு கர்நாடகத்தின் மூலை முடுக்குகளில் இருந்து வந்து மக்கள் அஞ்சலி செலுத்தினர். அவர் நடிகர் என்பதை தாண்டி மக்கள் பணிகளை ஆற்றினார். ஏழை மக்களுக்கு உதவிகளை செய்தார். அதனால் தான் அவர் மீது மக்கள் அந்த அளவுக்கு அன்பை செலுத்தினர். ஒரு நடிகருக்கு இவ்வளவு கூட்டம் வந்து அஞ்சலி செலுத்தியதை நான் முன் எப்போதும் பார்த்தது இல்லை.
தமது வீட்டில் ஒருவர் இறந்து விட்டதை போல் மக்கள் உணர்ந்து துக்கம் அடைந்தனர். ராஜ்குமாரின் குணங்கள் அப்படியே அவரிடம் காண முடிந்தது.
ராஜ்குமாரின் மக்கள் செல்வாக்கை பயன்படுத்தி அவர் வளரவில்லை. அவர் தனது சொந்த திறனை வெளிப்படுத்தி உயர்ந்த இடத்தை பிடித்தார். நன்றாக உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தவர், இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவர் இவ்வளவு சீக்கிரமாக நம்மை விட்டு விலகி செல்வார் என்று கனவிலும் நினைக்கவில்லை. அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்குமாறு நான் முன்பு கூறினேன். அந்த விருதுக்கு பரிந்துரை செய்வதாக முதல்-மந்திரி கூறியுள்ளார். புனித்ராஜ்குமாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறேன்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
பண்டப்பா காசம்பூர்
ஜனதா தளம் (எஸ்) குழுவின் துணைத்தலைவர் பண்டப்பா காசம்பூர் பேசுகையில், "நடிகர் ராஜ்குமார் 46 வயதில் இறந்தது நமக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் இறந்த பிறகு தான் அவர் செய்த சமூக சேவைகள் குறித்த தகவல்கள் வெளியாயின. அதை கண்டு நமக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் சமூக அக்கறையுடன் செயல்பட்டுள்ளார். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்" என்றார்.
அனுபவமிக்க அரசியல்வாதி ரோசய்யா
மறைந்த முன்னாள் கவர்னர் ரோசய்யா குறித்து பசவராஜ் பொம்மை பேசுகையில், "ஆந்திராவில் மந்திரியாக இருந்தவர் ரோசய்யா. அவர் நிதித்துறை மந்திரியாக 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன் பிறகு ஆந்திராவின் முதல்-மந்திரியாகவும் பணியாற்றினார். தமிழ்நாட்டின் கவர்னராக பணியாற்றினார். கர்நாடக கவர்னராகவும் சிறிது காலம் பொறுப்பு வகித்தார். பழுத்த அனுபவம் உள்ள அரசியல்வாதி. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.