கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் சாவு
நெல்லை அருகே கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் இறந்தார்.
நெல்லை:
வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் பால் சாமுவேல் தாமஸ் (வயது 40). இவர் ஒரு தனியார் செல்போன் நிறுவனத்தில் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு உதவியாக சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரத்தை சேர்ந்த மாரிமுத்து (35) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று மாரிமுத்து நெல்லை அருகே கீழ தென்கலம் பகுதியில் உள்ள பால் சாமுவேல் தாமசின் தோட்டத்திற்கு சென்றார். மாரிமுத்து அங்குள்ள கிணற்றில் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தாழையூத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.