பிளஸ்-2 மாணவி கண்டெடுத்த ராஜராஜசோழன் பெயர் பொறித்த ஈழக்காசுகள்
திருப்புல்லாணி அருகே கோரைக்குட்டத்தில் ராஜராஜசோழன் பெயர் பொறித்த ஈழக்காசுகளை பிளஸ்-2 மாணவி ஒருவர் கண்டெடுத்தார்.
ராமநாதபுரம்,
திருப்புல்லாணி அருகே கோரைக்குட்டத்தில் ராஜராஜசோழன் பெயர் பொறித்த ஈழக்காசுகளை பிளஸ்-2 மாணவி ஒருவர் கண்டெடுத்தார்.
3 ஈழக்காசுகள் கண்டெடுப்பு
இந்நிலையில் இப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் திருப்புல்லாணியைச் சேர்ந்த முனீஸ்வரி என்ற மாணவி முதலாம் ராஜராஜசோழன் பெயர் பொறித்த 3 ஈழக்காசுகளை கோரைக்குட்டம் என்ற ஊரில் கண்டெடுத்துள்ளார். இதனை பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலரும், தொல்லியல் ஆய்வாளருமான வே.ராஜகுரு பாராட்டினார். இது குறித்து அவர் கூறியதாவது:-
போர் வெற்றியை கொண்டாட
இங்கு கண்டெடுக்கப்பட்ட 3 காசுகளும் செம்பால் ஆன ஈழக்கருங்காசுகள் ஆகும். இக்காசுகளின் ஒருபக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் நான்கு வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும் கீழே மலரும் உள்ளன. வலதுபக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரின் இடதுகை அருகே தேவநாகரி எழுத்துகளில் “ஸ்ரீராஜராஜ” என மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இக்காசில் உள்ள மனிதன் இலங்கை காசுகளில் உள்ள உருவத்தை ஒத்திருக்கிறான். ஈழக்காசுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், தொண்டி, களிமன்குண்டு, அழகன்குளம் உள்ளிட்ட பல கடற்கரை ஊர்களில் கிடைத்துள்ளன.
இலங்கையின் பயன்பாட்டுக்காக அச்சடிக்கப்பட்ட இவை சோழர்களின் ஆளுகையின் கீழ் இருந்த பாண்டிய நாட்டுப் பகுதிகளிலும் புழக்கத்தில் இருந்துள்ளது. ஏற்கனவே இப்பள்ளி மாணவர்கள் பஞ்சந்தாங்கி, தாதனேந்தலில் சோழர்களின் ஈழக்காசுகள், பால்கரையில் டச்சுக்காரர்களின் துட்டு, திருப்புல்லாணியில் கச்சி வழங்கும் பெருமாள் எனும் பாண்டியர் காசு, ஆங்கிலேயர் காலத்தில் இலங்கை, மலேயா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் புழக்கத்தில் இருந்த காசுகளையும் கண்டெடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.