ரேஷன்கார்டுகளுடன் கிராம மக்கள் முற்றுகை

மதுக்கடையை அகற்றக்கோரி தாமோதரன்பட்டினம் கிராம மக்கள் ரேசன்கார்டுகளுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2021-12-13 18:55 GMT
ராமநாதபுரம்,

மதுக்கடையை அகற்றக்கோரி தாமோதரன்பட்டினம் கிராம மக்கள் ரேசன்கார்டுகளுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மதுக்கடையை அகற்றக்கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ளது தாமோதரன்பட்டினம். இந்த ஊரைச்சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நேற்று காலை கிராம தலைவர் தர்மராஜ் தலைமையில் ரேஷன்கார்டுகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்து முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க முயன்றபோது கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தோம். இந்நிலையில் எங்கள் கிராமத்தில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லும் வழியிலும் மதுக்கடை அமைத்துள்ளனர். இதனால் கிராம மக்கள் சொல்ல முடியாத அவதி அடைந்து வருகிறோம்.இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நடவடிக்கை எடுப்பதாக உறுதி

திருவாடானை தாசில்தார் எங்கள் கோரிக்கையை ஏற்று கடையை அகற்றுவதாக வாக்குறுதி அளித்தார். கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் போட்டுள்ளோம். ஆனால், எங்கள் கிராமத்தில் மக்களை அச்சுறுத்தும் பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் மதுக்கடையை இதுவரை அகற்றவில்லை. இதனால் ரேஷன்கார்டுகளை ஒப்படைத்து எங்களின் எதிர்ப்பை காட்ட முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

மேலும் செய்திகள்