வட்டப்பாறை அரசு பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும்
மலைவாழ் மக்கள் வாக்களிக்க வசதியாக வட்டப்பாறை அரசு பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
நாகர்கோவில்,
மலைவாழ் மக்கள் வாக்களிக்க வசதியாக வட்டப்பாறை அரசு பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
மக்கள் குறை தீர்க்கும் முகாம்
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலெக்டர் அரவிந்திடம், குமரி மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் கதிர்வேல் தலைமையில் மலைவாழ் மக்கள் சிலர் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
விளவங்கோடு தாலுகா கடையால் பேரூராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு பகுதியில் புறத்திமலை, வட்டபாறை, வெள்ளறக்கு மலை ஆகிய பகுதியில் மலைவாழ் பழங்குடியின மக்கள் (காணி சமுதாயம்) சுமார் 100 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் 300 வாக்காளர்கள் உள்ளனர். இவர் தேர்தல் நேரத்தில் வாக்களிப்பதற்கு சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிற்றார் சிலோன் காலனி பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து வருகிறார்கள். இதனால் முதியவர்கள் மற்றும் பெண்கள் பல்வேறு சிரமத்துக்கும், இன்னல்களுக்கும் ஆளாகின்றனர்.
வட்டப்பாறை பள்ளியில் வாக்குச்சாவடி
இதுதொடர்பாக பல்வேறு கோரிக்கை விடப்பட்ட நிலையில் தற்போது சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள பத்துகாணி மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைப்பதாக தகவல் தந்துள்ளார்கள். இதற்கு மாற்றாக மக்கள் நலன் கருதி வட்டபாறை அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.