சாலை ஆக்கிரமிப்பு அளவீடு பணிக்கு எதிர்ப்பு
திருவட்டாரில் சாலை ஆக்கிரமிப்பு அளவீடு பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவட்டார்,
திருவட்டாரில் சாலை ஆக்கிரமிப்பு அளவீடு பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சாலையில் ஆக்கிரமிப்பு
திருவட்டார்-குளச்சல் சாலையில், தபால் நிலைய சந்திப்பில் இருந்து ஆதிகேசவபெருமாள் கோவிலுக்கு செல்லும் சாலை வரை இருபுறமும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் மிகவும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என திருவட்டார் ஆதிகேசவபெருமாள் சேவா அறக்கட்டளை செயலாளர் தங்கப்பன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன்னோடியாக அளவீடு பணியை மேற்கொள்ள கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நேற்று காலையில் அளவீடு பணி நடைபெறுவதாக இருந்தது.
இதற்காக நேற்று காலையில் திருவட்டார் தபால் நிலைய சந்திப்பில் பொதுமக்கள் கூடி நின்றனர்.
வரைப்படம் பிரச்சினை
அப்போது திருவட்டார் சர்வேயர் வைகுண்ட ராஜன், திருவட்டார் வருவாய் அதிகாரி ராஜேஷ், கிராம நிர்வாக அதிகாரி மகேஷ்வரி மற்றும் போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் வந்தனர். அவர்கள் புதிய சர்வேபடி இடத்தை அளக்க இருப்பதாக கூறினர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பழைய சர்வே எண்ணில் குறிப்பிட்ட அளவின் படியும், பழைய வரைபடத்தின் படியும் அளவீடு செய்யவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதனால் அளவீடு செய்யும் பணி நடைபெறவில்லை. பின்னர் அதிகாரிகள் கூறும் போது, ஒரு மாதத்திற்குள் பழைய சர்வே எண்ணின் படியுள்ள வரைபடம் பெற்று அளவீடு செய்யலாம் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.