பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் கோவிலில் கார்த்திகை கடைசி சோமவார விழா ஆடு, கோழிகளை காணிக்கையாக வழங்கி பக்தர்கள் வழிபாடு
பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோவிலில் கார்த்திகை கடைசி சோமவார விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஆடு, கோழிகளை காணிக்கையாக வழங்கி வழிபாடு செய்தனர்.
அதிராம்பட்டினம்:-
பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோவிலில் கார்த்திகை கடைசி சோமவார விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஆடு, கோழிகளை காணிக்கையாக வழங்கி வழிபாடு செய்தனர்.
பொது ஆவுடையார் கோவில்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே பரக்கலக்கோட்டை கிராமத்தில் பொதுஆவுடையார் கோவில் உள்ளது. சிதம்பரத்தில் வீற்றிருக்கும் நடராஜ மூர்த்தியே இங்கு பொது ஆவுடையாராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக ஐதீகம். இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் (சோமவாரம்) சிறப்பு வழிபாடு நடைபெறும்.
இக்கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை அதாவது தைப்பொங்கல் அன்று மட்டுமே பகலில் நடை திறக்கப்பட்டு இருக்கும். மற்ற நேரங்களில் வாரத்தில் திங்கட்கிழமை இரவு மட்டுமே இங்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடக்கிறது.
சோம வார விழா
நடை சாத்தப்பட்டு இருக்கும் என்பதை அறிந்திருந்தும் பகல் நேரத்தில் பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். வழக்கம்போல் இந்த ஆண்டுக்கான சோம வார விழா கடந்த மாதம் (நவம்பர்) 22-ந் தேதி முதல் தொடங்கியது. நேற்று கார்த்திகை மாத கடைசி சோமவார விழா நடந்தது. விழாவில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துதல், மா விளக்கு போடுதல் என பல்வேறு வகைகளில் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, கட்டுமாவடி, முத்துப்பேட்டை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். தங்கம், வெள்ளி, நெல்மணிகள், துவரை, உளுந்து மற்றும் நவதானியங்கள், தேங்காய், ஆடு, கோழி என பல வகையான காணிக்கைகளை கோவிலுக்கு பக்தர்கள் வழங்கினர்.
கதவு முன்பு வழிபாடு
நேற்று பகலில் நடை சாத்தப்பட்டிருந்தும் பக்தர்கள் கதவு முன்பு பூ மாலைகளை அணிவித்து வழிபாடு செய்தனர். நேற்று நள்ளிரவு பொது ஆவுடையாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோவில் அருகில் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் விநாயகம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர், உறுப்பினர்கள், கிராம மக்கள், கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.