மெக்கானிக் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் திருட்டு
மெக்கானிக் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் திருட்டு
அடுக்கம்பாறை
வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த வீரா ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோதண்டன் (வயது 42), டிராக்டர் மெக்கானிக். இவருக்கு திருமணமாகி சரஸ்வதி என்ற மனைவியும், 1 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். இவர்கள் வசித்த வீடு பழுதடைந்து உள்ளதால், கடந்த 2 ஆண்டுகளாக தெள்ளூர்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவரது பழைய வீட்டில் தற்போது டிராக்டர் பழுது பார்ப்பதற்கான உபகரணங்கள் மற்றும் பீரோ உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு, வாடகை வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து வீட்டில் வைக்கப்பட்டு இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை திருடிச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திருடர்கள் பிடிபடாமல் இருக்க தாங்கள் வந்த பகுதிகளில் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர்.
பின்னர் நேற்று காலை வழக்கம்போல் கோதண்டன் வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்த தகவல் அறிந்த வேலூர் தாலுகா இன்ஸ்பெக்டர் நிலவழகன் மற்றும் அரியூர் போலீசாரும் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இதுகுறித்து அரியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.