கஞ்சா, குட்கா விற்பனை செய்த 697 பேர் கைது
தென் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகே கஞ்சா, குட்கா விற்பனை செய்த 697 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மதுரை,
தென் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகே கஞ்சா, குட்கா விற்பனை செய்த 697 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கஞ்சா விற்பனை
தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை ஒரு மாதத்தில் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல் அதிகாரி களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
அதன்படி, தென்மண்டல ஐ.ஜி. அன்பு உத்தரவின் பேரில் தென் மாவட்டங்களில் கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்க சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அந்த தனிப்படையினர் கடந்த 6-ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர்கள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, இதுவரை 67 வழக்குகள் பதிவு செய்து, 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 92 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சிறப்பு தனிப்படை
இதுதவிர சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்து வருபவர்கள் மீது இதுவரை 603 வழக்குகள் பதிவு செய்து, 1125 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் தொடர்புடைய 605 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதேபோல், தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் 56 தொடர் குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளை பிடித்து அவர் களில் 45 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணைப்பத்திரச் சான்றும், 11 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.
மேலும் தொடர்ந்து தென் மாவட்டங்களில் சிறப்பு தனிப்படைகளை அமைத்து இதுபோன்ற குற்றங்களை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.