குமரி விசைப்படகு கடலில் மூழ்கியது

கர்நாடகத்தில் குமரி மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற விசைப்படகு ஆழ்கடலில் மூழ்கியது. அதில் இருந்த 20 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2021-12-12 20:56 GMT
கொல்லங்கோடு:
கர்நாடகத்தில் குமரி மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற விசைப்படகு ஆழ்கடலில் மூழ்கியது. அதில் இருந்த 20 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விசைப்படகு
குமரி மாவட்டம் இனையம்புத்தன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ். இவருக்கு சொந்தமான அனிட் மரியா என்ற விசைப்படகில் கடந்த 5-ந் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளம் மனம்பம் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
 அந்த விசைப்படகில் குமரி மாவட்டத்ைத சேர்ந்த 18 பேர் உள்பட 20 மீனவர்கள் இருந்தனர். அவர்கள் நேற்று அதிகாலையில் கர்நாடக மாநிலம் மூடேஷ்வரம் துறைமுக பகுதியில் இருந்து சுமார் 30 கடல் நாட்டிகல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது படகின் அடிப்பாகத்தில் விரிசல் ஏற்பட்டு படகிற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. 
மீனவர்கள் தப்பினர்
இதனை கண்ட  மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தண்ணீர் புகுவதை தடுக்க பலமுறைகளில் முயன்றனர். ஆனால், முடியவில்லை. உடனே, அவர்கள் விசைப்படகில் இருந்த 3 சிறிய வள்ளங்கள் மூலம் பாதுகாப்பாக வெளியேறினர். 
சிறிது நேரத்தில் விசைப்படகிற்குள் தண்ணீர் புகுந்து கடலுக்குள் முழுவதுமாக மூழ்கியது. அந்த படகின் மதிப்பு ரூ.55 லட்சம் எனக்கூறப்படுகிறது. மேலும் விசைப்படகில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களும் கடலுக்குள் மூழ்கியது. 
 இந்த விபத்தை தொடர்ந்து படகில் இருந்த 20 மீனவர்களும் வள்ளங்கள் மூலம் பாதுகாப்பாக கர்நாடக மாநிலம் மூடேஷ்வரம் துறைமுகத்தில் கரைேசர்ந்தனர். 
 பின்னர், இதுகுறித்து குமரி மாவட்டத்தில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். விசைப்படகு மூழ்கிய நிலையில் மீனவர்கள் உயிர் தப்பிய தகவல் அறிந்ததும் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்