ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
திருச்சி
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும். அதில், மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.
பகல்பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 20 நாட்களும் பெரிய பெருமாள் எனப்படும் மூலவர் ரெங்கநாதர் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் போது உற்சவர் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலும், ராப்பத்து உற்சவத்தின் போது திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திலும் அனைத்து ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களுடன் எழுந்தருளி சேவை சாதிப்பார்.
திருநெடுந்தாண்டகம்
திருவிழா நாட்களில் நாலாயிர திவ்யபிரபந்தம் ஆனது பகல்பத்து மற்றும் ராப்பத்து என 20 நாட்கள் அபிநயம் மற்றும் இசையுடன் நம்பெருமாள் முன் பாடப்படும். அதற்காக ரெங்கநாதரிடம் மூலஸ்தானத்தில் அனுமதி பெற்று இந்த நாலாயிர திவ்ய பிரபந்தத்தை படிக்க தொடங்குவதே திருநெடுந்தாண்டகம் ஆகும்.
ஸ்ரீரங்கம் கோவிலில் நாலாயிரம் திவ்யபிரபந்தம் படிக்க ஆரம்பித்தவுடன் மற்ற திவ்ய தேசங்களில் இருந்து பெருமாள்கள் அனைவரும் இங்கு எழுந்தருள்கின்றனர் என்பது ஐதீகம். இதனால் இக்கோவிலில் படிக்கும் திவ்யபிரபந்தத்தை வேறு எங்கும் படிக்க மாட்டார்கள். அப்படி படித்தால் அதற்கு பலன் இருக்காது என்பது நம்பிக்கை.
வைகுண்ட ஏகாதசி விழா
இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 3-ந்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் போது, தினமும் நம்பெருமாள் ஒவ்வொரு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளுகிறார். இதேபோல் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். அந்தவகையில், பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான இன்று (திங்கட்கிழமை) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். இதற்காக நம்பெருமாள் நாச்சியார் கோலத்தில் மூலஸ்தானத்தில் இருந்து இன்று காலை 6 மணிக்கு புறப்பட்டு 7 மணிக்கு பகல் பத்து அர்ஜூன மண்டபம் வந்தடைகிறார். பொதுஜன சேவை காலை 6.30 மணி முதல் மாலை 4.30 மணி முடிய நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு பின் மூலஸ்தான சேவை கிடையாது.
சொர்க்கவாசல் நாளை திறப்பு
நாளை (செவ்வாய்க்கிழமை) ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். நாளை அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் (லக்னப்படி) எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருளுகிறார்.
இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். காலை 7 மணிவரை சேவார்த்திகள் அனுமதி இல்லை. காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை பொதுமக்கள் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சொர்க்கவாசல் 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை பிற்பகல் 1 மணி முதல் இரவு 7.30 மணிவரையிலும் திறந்திருக்கும். 20-ந் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணிவரை பரமபத வாசல் திறந்திருக்கும். 21-ந் தேதி சொர்க்க வாசல் திறப்பு இல்லை. 22-ந் தேதி பிற்பகல் 1 மணி முதல் இரவு 7.30 மணிவரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். 23-ந் தேதி காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு இருக்கும்.
ராப்பத்து நிகழ்ச்சி
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய விழாவான சொர்க்கவாசல் திறப்பு தினமான 14-ந் தேதி (நாளை) முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. அதன்பின்னர் ராப்பத்து ஏழாம் திருநாளான 20-ந் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 21-ந்தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று சொர்க்க வாசல் திறக்கப்படாது.
பத்தாம் திருநாளான 23-ந்தேதி தீர்த்தவாரியும், 24-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
பக்தர்களுக்கு அனுமதியில்லை
பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்காக இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணி முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
நம்பெருமாள் பரமபத வாசல் கடந்து, திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளிய பிறகு நாளை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இரவு 8 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது.
பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார்
சொர்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி திருச்சி போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் உள்பட 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.