ஊராட்சி தலைவரை தாக்கி மனைவியிடம் நகை பறிப்பு

ஊராட்சி தலைவரை தாக்கி மனைவியிடம் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

Update: 2021-12-12 20:02 GMT
குன்னம்:

9 பவுன் சங்கிலிகள் பறிப்பு
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள புஜங்கராயநல்லூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பூபதி. இவருடைய மனைவி சுமதி(வயது 46). இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது முககவசம், குல்லா அணிந்த மர்ம நபர் ஒருவர் சுமதி அருகில் வந்தார். இதைக்கண்ட சுமதி யார் நீ என்று கேட்டுள்ளார். அப்போது மறைந்திருந்த மேலும் 2 பேரும் அங்கு வந்தனர். அவர்கள் சுமதியை சூழ்ந்து உருட்டுக்கட்டையால் தாக்க முயற்சித்ததோடு, உருட்டுக்கட்டையை காட்டி மிரட்டி சுமதியிடம் இருந்து 7½ பவுன் தாலிச்சங்கிலி, 1½ பவுன் சங்கிலி என மொத்தம் 9 பவுன் சங்கிலிகளை பறித்து சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் அங்கு வந்து சுமதியிடம் விசாரணை நடத்தினர்.
ஊராட்சி தலைவர் வீட்டிற்குள்...
இந்நிலையில் சுமதியிடம் சங்கிலிகளை பறித்த 3 மர்ம நபர்களும் புஜங்கராயநல்லூரில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள ஜமீன் பேரையூர் கிராமத்திற்கு சென்றுள்ளனர். நள்ளிரவு 1 மணி அளவில் அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே வசிக்கும் ஜமீன் பேரையூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் வீட்டின் பின்பக்க கதவின் உள்பக்க தாழ்ப்பாளை இரும்பு கம்பியால் நெம்பி உடைத்து 3 மர்ம நபர்களும் உள்ளே நுழைந்துள்ளனர்.
அப்போது வீட்டில் மோகன், அவரது மனைவி ராணி(40) ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தனர். மர்ம நபர்கள் வீட்டின் ஒவ்வொரு அறையாக நுழைந்து பார்த்துள்ளனர். அப்போது ஒரு அறையில் இருந்த பீரோவை இரும்பு கம்பியால் நெம்பி திறந்து தேடி பார்த்தனர். ஆனால் பணம், நகை எதுவும் சிக்கவில்லை.
கம்பியால் தாக்கினர்
இதையடுத்து வீட்டின் முன்னறையில் படுத்திருந்த ராணியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துள்ளனர். இதனால் திடுக்கிட்டு கண் விழித்த ராணி உடனடியாக சுதாரித்துக்கொண்டு, சங்கிலியை தனது கையால் பிடித்துக் கொண்டதால் தாலிச்சங்கிலி துண்டானது. இதில் 4 பவுன் சங்கிலி மர்ம நபர்கள் கையில் சிக்கியது. சத்தம் கேட்டு எழுந்த மோகன், மர்ம நபர்களை தடுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் மோகனை இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. அதனை தடுத்தபோது மோகன் கையில் பலத்த அடிபட்டது. இதனால் அவரும், ராணியும் பயந்து வீட்டின் ஒரு அறைக்கு சென்று கதவை சாத்திக் கொண்டனர். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சை
இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி, மங்களமேடு துணை சூப்பிரண்டு சந்தியா, இன்ஸ்பெக்டர் ரஞ்சனா மற்றும் குன்னம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ேபாலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மர்ம நபர்கள் தாக்கியதில் கையில் முறிவு ஏற்பட்ட மோகன் அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பொதுமக்களிடம் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்