கல்லூரி மாணவிக்கு கொரோனா
நாகா்கோவிலில், கல்லூரி மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கல்லூரி வளாகம், வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
நாகர்கோவில்:
நாகா்கோவிலில், கல்லூரி மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கல்லூரி வளாகம், வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
சளி பரிசோதனை
குமரி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். தற்பொழுது ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கவும் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கேரள எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என சுகாதார பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு சளி பரிசோதனை செய்து வருகிறார்கள். மேலும் கல்லூரிகளில் தடுப்பூசி எடுத்து கொள்ளாத மாணவர்கள், பேராசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் நடந்து வருகிறது.
கல்லூரி மாணவிக்கு கொரோனா
இந்த நிலையில் இரணியல் பகுதியை சேர்ந்த ஒரு மாணவி, நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த மாணவிக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் அவருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா இருப்பது நேற்று முன்தினம் உறுதியானது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து நேற்று கல்லூரி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.
மாணவியுடன் படிக்கும் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாணவியின் பெற்றோருக்கும் சளி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகரில் கடந்த 3 நாட்களில் மட்டும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.