தென்ஆப்பிரிக்காவில் இருந்து கர்நாடகம் வந்தவருக்கு ஒமைக்ரான் உறுதி
தென்ஆப்பிரிக்காவில் இருந்து கர்நாடகம் வந்தவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் கர்நாடகத்தில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூரு:
ஒமைக்ரான் வைரஸ்
தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. அதிவேகமாக பரவும் தன்மையை கொண்ட அந்த வைரஸ், பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்தியாவிலும் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. அந்த 2 பேரும் பெங்களூருவை சேர்ந்தவர்கள் ஆவர். அதில் ஒருவர் தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுவிட்டார். மற்றொருவரான 46 வயது அரசு டாக்டர் சிவாஜிநகரில் உள்ள பவுரிங் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
அதன் மரபணு வரிசையை கண்டறிய மரபணு பகுப்பாய்வு ஆய்வகத்திற்கு சளி மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன. அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த 1-ந் தேதி 34 வயது இளைஞர் ஒருவர் பெங்களூருவுக்கு வந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து அவரது சளி மாதிரி மரபணு பகுப்பாய்வு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதன் முடிவு நேற்று வந்தது. அதில் அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
ஆதங்கப்பட தேவை இல்லை
இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று கூறுகையில், ‘‘தென்ஆப்பிரிக்காவில் இருந்து 34 வயது இளைஞர் கடந்த 1-ந் தேதி பெங்களூரு வந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது சளி மாதிரியை மரபணு பகுப்பாய்வு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தோம். அதில் அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது.
அவருக்கு பெங்களூருவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். இதில் அந்த 20 பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை. அதனால் பொதுமக்கள் யாரும் ஆதங்கப்பட தேவை இல்லை’’ என்றார்.