பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம்
அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் தொடர்பாக பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர்,
அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை கிருஷ்ணகிரி, காஞ்சீபுரம், பெரம்பலூர் உள்பட 15 மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளை நிர்வாகிகள், பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு நிர்வாகிகள், நகரங்களுக்கு உட்பட்ட வார்டு நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட வட்ட நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான முதல்கட்ட தேர்தல் இன்றும், நாளையும் நடக்கிறது. அதன்படி விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிகளில் 5 இடங்களிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் 9 இடங்களிலும், சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 6 இடங்களிலும், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 4 இடங்களிலும் இந்த தேர்தல் நடைபெறுகின்றது. தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நடத்த விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கரை, விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி வரவேற்றார். அதனைத்தொடர்ந்து தேர்தலில் எப்படி பணியாற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம் விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரில் நடைபெற்றது.
தேர்தல் பொறுப்பாளர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் எம்.எல்.ஏ. மான்ராஜ், சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து தேர்தல் பொறுப்பாளர்களிடம் தேர்தல்களை நடத்துவதற்கான வாக்காளர் பட்டியல், விண்ணப்ப படிவம் முதலானவற்றை முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் ஆகியோர் வழங்கினர்.