குளிர்கால கூட்டத்தொடருக்கான செலவு ரூ.12 கோடியாக குறைப்பு - நிதி பற்றாக்குறைவால் பசவராஜ் பொம்மை அதிரடி
பெலகாவியில் நடைபெற உள்ள குளிர்கால கூட்டத்தொடருக்கான செலவு ரூ.12 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
பெங்களுரு:
4,500 நபர்களுக்காக...
பெலகாவி மாவட்டத்தில் உள்ள சுவர்ணசவுதாவில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடருக்காக கர்நாடக சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக பெங்களூரு விதானசவுதாவில் இருந்து பெரும்பாலான அரசு அலுவலகம், பெலகாவிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டத்தொடரின் போது சுவர்ணசவுதா அருகே போராட்டம் நடத்துவதற்கு 75-க்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் போராட்டத்தின் போது அசம்பாவிதங்கள் நடைபெறுவது தடுக்க 2,800 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், உயர் அதிகாரிகள், பிற அதிகாரிகள், ஊழியர்கள் என 4,500 நபர்களுக்காக 2,100 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. 330 அரசு வாகனங்கள் பயன்படுத்தப்படுவதுடன், 435 டிரைவர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர 50 தனியார் வாகனங்களும் பயன்படுத்தப்படுகிறது.
ரூ.12 கோடியாக குறைப்பு
இதுபோன்ற காரணங்களால் வழக்கமாக பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்துவதற்கு ரூ.24 கோடி வரை செலவு செய்யப்படும். அதன்படி, இன்று தொடங்கும் கூட்டத்தொடருக்காகவும் ரூ.24 கோடி ஒதுக்க அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். இதற்கான செலவு அறிக்கையும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக பெலகாவியில் நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடருக்கான செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டு இருந்தாா். அத்துடன் பெலகாவி கூட்டத்தொடருக்காக ஆகும் செலவை ரூ.24 கோடியில் இருந்து ரூ.12 கோடிக்கு குறைத்து பசவராஜ் பொம்மை உத்தரவிட்டு இருக்கிறது.
செலவை குறைக்க நடவடிக்கை
சுவர்ண சவுதாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்காக, சிந்தோலி கிராமத்தில் பெரிய கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கூடாரத்தில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் தங்குவதற்கு, பெலகாவி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பிலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பெலகாவியில் நடைபெற உள்ள குளிர்கால கூட்டத்தொடரில் செலவுகளை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் உத்தரவின் பேரில் சில சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, கூட்டத்தொடருக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சுரேஷ் இட்டாலா தெரிவித்துள்ளார்.