சிவகாசியில் பாதுகாப்புத்துறை சார்ந்த தொழில் தொடங்க வாய்ப்பு
சிவகாசியில் பாதுகாப்புத்துறை சார்ந்த தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
விருதுநகர்,
சிவகாசியில் பாதுகாப்புத்துறை சார்ந்த தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
தொழில் கடன் விழா
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் ஏ.ஆர்.ஆர் சீனிவாசன், சாத்தூர் ரகுராமன் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சிறப்பு தொழில் கடன் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக நிர்வாக இயக்குனர் ஹன்ஸ் ராஜ் வர்மா ஆகியோர் கலந்து கொண்டு தொழில் முனைவோருக்கு கடன் ஆணைகள் மற்றும் கடன் தொகைக்கான காசோலையை வழங்கினர்.
இதில் 8 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.6 கோடியே 80 லட்சம் மதிப்பிலான கடன் அனுமதி ஆணைகளையும், 6 நிறுவனங்களுக்கு ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்பிலான கடன் தொகைக்கான காசோலையையும் வழங்கினர்.
மேலும் 12 தொழில் முனைவோரிடம் இருந்து ரூ. 10 கோடியே 20 லட்சம் மதிப்பிலான கடன் விண்ணப்பங்களை அமைச்சர்கள் பெற்றுக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட தொழில் மையம் சார்பில் தமிழக அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 3 தொழில் முனைவோருக்கு ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பிலான கடன் தொகைஆணைகள் வழங்கப்பட்டது.
விழா வில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது:-
தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிய தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடன் வழங்கி தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.
படித்த இளைஞர்கள் பலருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவது தான் இந்த நிகழ்ச்சி. விவசாயமும், தொழிலும் இரு கண்கள் போன்றவை. இரண்டையும் தான் வளர்க்க வேண்டும். முதல்-அமைச்சர் முதன்முதலில் விவசாயத்துக்கு என்று தனி பட்ஜெட்டை நிறைவேற்றினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாதுகாப்பு துறை
விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-
பாதுகாப்புத்துறை சார்ந்த தொழிற்சாலைகளை சிவகாசியில் உருவாக்க மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது.
பட்டாசு நூற்பாலை அச்சு போன்ற பாரம்பரிய தொழில்களை காப்பதோடு புதிய தொழில் வாய்ப்புகளையும் நாம் உருவாக்கி அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
விருதுநகர் அருகே பட்டம்புதூர் சிப்காட் தொழிற்பேட்டையில் மெகா ஜவுளி பூங்கா தொடங்கப்பட உள்ளது. மத்திய அரசின் தேசிய பூங்காவும் வரவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் திலகவதி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக பொது மேலாளர் கிருபாகரன், தொழிலதிபர்கள் ராஜாசிங், டாக்டர் ரத்னவேல், ஹரி தியாகராஜன் உள்ளிட்ட தொழிலதிபர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 998 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.