விவசாயி வீட்டில் ரூ.9 லட்சம் நகை கொள்ளை

திருவண்ணாமலையில் விவசாயி வீட்டில் ரூ.9 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2021-12-12 17:49 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் விவசாயி வீட்டில் ரூ.9 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

 விவசாயி 

திருவண்ணாமலை வேங்கிக்கால் செல்வா நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன், விவசாயி. இவரது மனைவி கலாவதி. இவர், சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி. இவர்களுக்கு சொந்தமாக தானிப்பாடி அருகில் உள்ள போந்தை கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. 

இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு போந்தை கிராமத்திற்கு சென்று உள்ளனர். நேற்று காலையில் செல்வா நகர் பகுதியில் பால் பாக்கெட் போடும் நபர் கோவிந்தராஜன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

பின்னர் அவர் இது குறித்து பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவிக்க சென்றுள்ளார். அப்போது மர்ம நபர்கள், பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்து விடக்கூடாது என்று அந்த வீட்டின் முன்பக்க கதவின் வெளிபுறத்தில் தாழ்ப்பாள் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கோவிந்தராஜனுக்கு தகவல் தெரிவித்தனர்.

 ரூ.9 லட்சம் நகை கொள்ளை

அதன்பேரில் மனைவியுடன் அவர் வீட்டிற்கு வந்து பார்வையிட்டார். அப்போது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

மேலும் பீரோவில் இருந்தத 28 பவுன் நகைகள் மற்றும் 250 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள்  
கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.9 லட்சம் என கூறப்படுகிறது. 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து கைரேகைகளை சேகரித்தனர். 

 மற்றொரு சம்பவம்

இதேபோல அதே தெருவில் உள்ள மற்றொரு வீட்டின் பூட்டையும் மர்ம நபர்கள் உடைத்து 1 பவுன் நகை மற்றும் ரூ.2 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். 

இந்த சம்பவங்கள் குறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்