ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகள்
ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகள்
பல்லடம்,
பல்லடம் அருகே ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஆடிட்டர் வீடு
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வேலா அவென்யூவில் வசிப்பவர் ஞானஸ்கந்தன் (வயது 38) ஆடிட்டர். இவருடைய மனைவி லலிதாம்பாள் (36).
கடந்த 8-ந்தேதி ஞானஸ்கந்தன் உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது தந்தையை பார்க்க சென்னைக்கு சென்றார். அவரது மனைவி லலிதாம்பாள் கோவையில் தங்கியுள்ள தனது பெற்றோரை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை இருவரும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
நகை,பணம் திருட்டு
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு துணிகள் மற்றும் பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகைகள் மற்றும் குத்துவிளக்கு உள்பட ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், ரூ.8,700 மற்றும் கவரிங் நகைகள் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இது குறித்து ஞானஸ்கந்தன் பல்லடம் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை மற்றும் தடவியல் நிபுணர்கள் உதவியுடன் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளின் தடயங்களை சேகரித்தனர்.
மேலும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.