காரிமங்கலம் பகுதியில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
காரிமங்கலம் பகுதியில் பூக்களின் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது.
காரிமங்கலம்:
காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான அடிலம், கோவிலூர், திண்டல், கும்பாரஅள்ளி, பூனாத்தனஅள்ளி, பேகாரஅள்ளி, முக்குளம், எலுமிச்சனஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தொடர்மழை காரணமாகவும், பனிக்காலம் என்பதாலும் பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக குண்டு மல்லி, முல்லை ஒரு கிலோ ரூ.1,500-க்கும், கனகாம்பரம் ரூ.1,000-க்கும், அரளி ரூ.400-க்கும், பன்னீர் ரோஸ், பட்டன் ரோஸ் ரூ.200-க்கும் சம்பங்கி, சாமந்தி, கோழிக்கொண்டை ரூ.100-க்கும் விற்கப்படுகிறது. சபரிமலை சீசன், கோவில் திருவிழாக்கள் நடப்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்து உள்ளது. வரும் நாட்களில் பூக்களின் வரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும் என பூ வியாபாரிகள் கூறினர். பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.