தர்மபுரியில் பா.ஜ.க.வினர் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் பாஜகவினர் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் அனந்த கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் சரவணன், வெங்கட்ராஜ், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் ஐஸ்வரியம் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்துக்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் மரியதாஸ், கிஷோர் கே.சாமி, கல்யாணராமன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களை கைது செய்த தமிழக அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் பொன்னுசாமி, மதியழகன், ராஜசேகர், நாகராஜ், சண்முகம், சுரேஷ், செல்வம், முன்னாள் நகர செயலாளர் சக்திவேல், நகர பொதுச்செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் இந்துக்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் சமூக ஆர்வலர்களை கைது செய்த தமிழக அரசை கண்டித்து கட்சி நிர்வாகிகள் பேசினர்.