பா.ஜ.க.வினர் வாயில் கருப்பு துணி கட்டி மவுன போராட்டம்
திண்டுக்கல்லில் தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் வாயில் கருப்பு துணி கட்டி மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து திண்டுக்கல்லில் நேற்று மவுன போராட்டம் நடந்தது. திருச்சி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை தாங்கினார். துணை தலைவர் தண்டபாணி, மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ், செயலாளர் கங்காதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தின் போது, கருத்துரிமையை பறிக்கும் வகையில் தி.மு.க. அரசு கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குற்றம்சாட்டி பா.ஜ.க.வினர் வாயில் கருப்பு துணி கட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் தி.மு.க. அரசை கண்டிக்கும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.