கேரளாவுக்கு கடத்த முயன்ற 350 மூட்டை ரேஷன் அரிசி, லாரியுடன் பறிமுதல்
வேளாங்கண்ணி அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 350 மூட்டை ரேஷன் அரிசியுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக கூட்டுறவு துறை தற்காலிக ஊழியர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 350 மூட்டை ரேஷன் அரிசியுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக கூட்டுறவு துறை தற்காலிக ஊழியர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரியில் அரிசி மூட்டைகள் ஏற்றினர்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே வடுகச்சேரி கிராமத்தில் ஒரு ரேஷன் கடை முன்பு ஒரு லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு அரிசி மூட்டைகளை சிலர் ஏற்றி கொண்டிருந்தனர். இதை பார்த்து சந்தேகம் அடைந்த கிராம மக்கள், இதுகுறித்து தாசில்தார் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பெரியசாமி, கீழையூர் போலீீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
350 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல்
விசாரணையில் அவர்கள், கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் வெள்ளிமான் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சிஜூராஜன் (வயது 39), அதே மாவட்டம் சூரைநாடு பகுதியை சேர்ந்த கிளீனர் சஜீவ் (33), கூட்டுறவு அங்காடி நகர்வு ஊழியராக தற்காலிமாக பணிபுரிந்து வரும் திருக்குவளை அருகே வடமலையான் செட்டி பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் (49) ஆகிய 3 பேர் என்பது தெரிய வந்தது.
இவர்கள் 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், லாரியில் சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் 350 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது.
மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 350 மூட்டை ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றதும், லாரியில் கேரளா பதிவு எண் கொண்ட நம்பர் பிளேட்டின் மீது தமிழ்நாடு பதிவு எண் கொண்ட நம்பர் பிளேட்ைட மறைத்து வைத்து நூதன முறையில் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றதும் தெரியவந்தது.
லாரி பறிமுதல்
இதை தொடர்ந்து ரேஷன் அரிசி மூட்டைகளுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் லாரியையும், 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் 3 பேரிடமும் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன், வட்ட வழங்கல் அதிகாரிகள் ரமேஷ், மாதவன் மற்றும் உணவு வழங்கல் துறை பறக்கும் படை துணை வட்டாட்சியர் ஜெயசீலன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளுடன் லாரியையும், சிஜூராஜன், சஜீவ், சோமசுந்தரம் ஆகிய 3 பேரையும் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த ரேஷன் அரிசி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.