மதுரவாயல் தரைப்பாலத்தில் வெள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் அடித்து செல்லப்பட்ட வாலிபர்

மதுரவாயல் தரைப்பாலத்தில் மோட்டார் சைக்கிளுடன் அடித்து செல்லப்பட்ட வாலிபர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

Update: 2021-12-12 10:44 GMT
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மழை ஓய்ந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் மதுரவாயலில் கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி இன்னும் வெள்ளம் செல்கிறது. தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதால் அந்த வழியாக பொதுமக்கள் யாரும் செல்லாமல் தரைப்பாலத்தின் இருபுறமும் போலீசார் தடுப்புகளை கொண்டு மூடி வைத்து உள்ளனர்.இந்தநிலையில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள், போலீசாரின் தடுப்பை மீறி தரைப்பாலத்தில் பாய்ந்தோடிய வெள்ளத்தில் செல்ல முயன்றனர். பாலத்தின் நடுவில் சென்றபோது இருவரும் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். மோட்டார் சைக்கிளின் பின்புறம் இருந்தவர், அங்கிருந்த கம்பியை பிடித்தபடி பாலத்தை கடந்து உயிர் தப்பினார். மோட்டார்சைக்கிளை ஓட்டிச்சென்ற வாலிபர் மட்டும் மோட்டார்சைக்கிளுடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

அவர் யார்?, எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. வெள்ளத்தில் அடித்துச் செல்ல வாலிபரை, 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தேடி வருகிறார்கள். அவரது கதி என்ன? என்பது இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதே தரைப்பாலத்தில் கடந்த வாரம் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிருடன் மீட்கப்பட்டார். மற்றொருவர் பிணமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்