பெரம்பூர் பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு
பெரம்பூர் பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சியுடன் மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி இணைந்து பெரம்பூர் பள்ளித்தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் மற்றும் பற்களை எவ்வாறு முறையாக பராமரிப்பது? என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக்கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் பட்ட மேற்படிப்பு கல்வியின் இயக்குனர் டாக்டர் ஜெய்தீப் மகேந்திரா கலந்துகொண்டு பல் பராமரிப்பு குறித்தும், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் குறித்தும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கையேடு மற்றும் துணிப்பைகளை வழங்கினார்.
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை கழுவுதல் குறித்து மாணவிகளுக்கு அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதையடுத்து நாடகங்கள் மற்றும் பொருட்காட்சிகள் மூலம் மாணவிகளுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பல் மருத்துவக்கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் என்.அம்பலவாணன், மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், உயர் கல்வி அலுவலர் டி.நளினிகுமாரி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.