வேப்பனப்பள்ளி அருகே உயிரை பணயம் வைத்து ஆற்றை கடக்கும் கிராம மக்கள் தரைப்பாலம் அமைத்து தரக்கோரிக்கை
வேப்பனப்பள்ளி அருகே உயிரை பணயம் வைத்து ஆற்றை கடந்து செல்லும் கிராம மக்கள் தரைப்பாலம் அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே உயிரை பணயம் வைத்து ஆற்றை கடந்து செல்லும் கிராம மக்கள், தரைப்பாலம் அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆற்றை கடக்கும் கிராம மக்கள்
வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் நாச்சிகுப்பம் பஞ்சாயத்துக்கு உட்பட்டது நந்தகுண்டப்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து அருகே உள்ள கத்திரிப்பள்ளி கிராமத்திற்கு ரேஷன் பொருட்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், வேலைக்கு செல்ல வேண்டும் என்றாலும் மார்க்கண்டேயன் கிளை நதி ஆற்றில் இறங்கித்தான் செல்ல வேண்டிய உள்ளது.
தற்போது இந்த நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றை கடந்து செல்ல கிராம மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். ஊரை விட்டு அப்படியே வேறு பகுதிக்கு செல்ல வேண்டும் என்றாலும் சுமார் 12 கிலோ மீட்டரை சுற்றித்தான் சென்று வருகின்றனர்.
தரைப்பாலம் வேண்டும்
இதனால் கிராம மக்கள் மார்க்கண்டேயன் கிளை நதி ஆற்றில் கழுத்து வரை உள்ள தண்ணீரில் இறங்கி பக்கத்துக்கு ஊருக்கு செல்கின்றனர். அங்கு ரேஷன் பொருட்களை வாங்கிக்கொண்டு மூட்டைகளை தலையில் சுமந்து கொண்டு அதே நதியில் இறங்கி வருகின்றனர். இப்படி தினமும் உயிரை பணயம் வைத்து அந்த கிராம மக்கள் பயணம் செய்கின்றனர்.
வயதானவர்கள் தங்களுக்கான ரேஷன் பொருட்களை வாங்காமல் விட்டு விடுகின்றனர். எனவே இந்த ஆபத்தான பயணத்தில் இருந்து மக்களை விடுவிக்க அந்த பகுதியில் தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.