கரூரில் நகரத்தார் நோன்பு விழா: ஒரு கிலோ உப்பு ரூ.20 ஆயிரத்திற்கு ஏலம்
கரூரில் நகரத்தார் நோன்பு விழாவில் ஒரு கிலோ உப்பு ரூ.20 ஆயிரத்திற்கு ஏலம் போனது.
கரூர்,
விநாயகர் நோன்பு
நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாய மக்கள் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தை தொடர்ந்து 21 நாட்கள் விநாயகர் நோன்பு இருப்பது வழக்கம். இதனைதொடர்ந்து வீடுகள், சத்திரம், கோவில்களில் கூட்டு வழிபாடு செய்து பால், கருப்பட்டி, பனியாரம், கடலை உருண்டை, எள் உருண்டை, திரட்டுப்பால் மற்றும் பலகாரங்களை படையல் வைத்தனர்.
கரூர் அழகம்மை மகாலில் நடைபெற்ற நோன்புக்கு தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். பொருளாளர் குமரப்பன் முன்னிலை வகித்தார். செயலாளர் மேலை பழனியப்பன் நோன்பின் மாண்பினை விளக்கி கூறினார்.
மங்கல பொருட்கள்
இதனைதொடர்ந்து மாவிளக்கில் 21 நூல்கள் திரியிட்டு, சமூதாய பெரியவர்கள் இழை (திரியுடன் கூடிய மாவிளக்கை சுடர் ஏற்றி) எடுத்துக்கொடுக்க நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாய மக்கள் அதை சுடரோடு விழுங்கி நோன்பு களைந்தனர். இதன் மூலம் துன்பங்கள் நீங்கி, சுபகாரியங்கள் நிகழும் என்பது ஐதீகம்.இதையடுத்து, வழிபாட்டில் பக்தர்களால் வாங்கி வைக்கப்பட்ட உப்பு, தேங்காய், வாழைப்பழம், கற்கண்டு உள்ளிட்ட 21 மங்கல பொருட்கள் ஏலம் விடப்பட்டது.
ரூ.1¾ லட்சத்துக்கு ஏலம்
இதில் ஒரு கிலோ உப்பு ரூ.20 ஆயிரத்திற்கும், பணப்பை ரூ. 6 ஆயிரத்திற்கும், ஒரு கிலோ கற்கண்டு ரூ. 5,001-க்கும் மாலை ரூ. 7,001 க்கும், எலுமிச்சம்பழம் ரூ. 5,001-க்கும், 5 தேங்காய் ரூ. 10 ஆயிரத்திற்கும், பேரிச்சம்பழம் ரூ. 7,501-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து ரூ. 84 ஆயித்துக்கு ஏலம் போனது.