ஸ்வீடன் நாட்டில் இருந்து சமூக வலைதள நண்பனை பார்க்க மும்பை பறந்து வந்த சிறுமி
சமூகவலைதள நண்பனை பார்க்க ஸ்வீடன் நாட்டில் இருந்து மும்பை வந்து தங்கியிருந்த சிறுமியை தீவிர விசாரணைக்கு பிறகு போலீசார் மீட்டனர்.
மும்பை,
சமூகவலைதள நண்பனை பார்க்க ஸ்வீடன் நாட்டில் இருந்து மும்பை வந்து தங்கியிருந்த சிறுமியை தீவிர விசாரணைக்கு பிறகு போலீசார் மீட்டனர்.
ஸ்வீடன் நாட்டு சிறுமி
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி சமீபத்தில் மாயமானார். இதுதொடர்பாக சிறுமியின் தந்தை அந்த நாட்டு போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி புகார் அளித்தார்.
விசாரணையில் சிறுமி மும்பையை சேர்ந்த 19 வயது வாலிபருடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமி மாயமானது தொடர்பாக சர்வதேச போலீசாரின் ‘எல்லோ நோட்டீஸ்' கடந்த சில நாட்களுக்கு மும்பை போலீசாருக்கு கிடைத்தது.
மும்பையில் மீட்பு
உடனடியாக மும்பை குற்றப்பிரிவு போலீசார் வெளிநாட்டு சிறுமியுடன் தொடர்பில் இருந்த வாலிபரை தொழில்நுட்ப உதவி மூலம் கண்டுபிடித்தனர். கல்லூரி மாணவரான அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் சிறுமி சீத்தாகேம்ப் பகுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுமியை மீட்டனர். பின்னர் அவர்கள் சிறுமியை டோங்கிரியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்தனர்.
இந்தநிலையில் சிறுமி மீட்கப்பட்ட தகவல் அவரது குடும்பத்தினருக்கு ஸ்வீடன் தூதரகம் மற்றும் டெல்லி சர்வதேச போலீஸ் அலுவலகம் மூலம் தெரிவிக்கப்பட்டது.
குடும்பத்தினருடன் ஒப்படைப்பு
இதையடுத்து சிறுமி தந்தை மற்றும் குடும்பத்தினர் மும்பை விரைந்து வந்தனர். இதற்கிடையே சட்ட வழிமுறைகள் முடிந்த பிறகு, போலீசார் சிறுமியை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சிறுமியை தங்களது நாட்டுக்கு அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து மும்பை போலீஸ் துணை கமிஷனர் நீலோட்பால் கூறுகையில், "சிறுமி சுற்றுலா விசாவில் மும்பை வந்து உள்ளார். அவர் இன்ஸ்டாகிராம் நண்பனுக்கு எதிராக எந்த புகாரும் அளிக்கவில்லை. எனவே இந்த சம்பவத்தில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை" என்றார்.
சமூகவலைதள நண்பனை பார்க்க சிறுமி வெளிநாட்டில் இருந்து மும்பை வந்த சம்பவம் பொது மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.