போலீஸ் நிலையத்தில் வெடித்து சிதறிய பட்டாசுகள்
தக்கலை போலீஸ் நிலையத்தில் பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியது. இதில் ஜன்னல் கண்ணாடிகள், மேற்கூரை சேதமடைந்தது.
பத்மநாபபுரம்,
தக்கலை போலீஸ் நிலையத்தில் பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியது. இதில் ஜன்னல் கண்ணாடிகள், மேற்கூரை சேதமடைந்தது.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
பட்டாசுகள் வெடித்தன
குமரி மாவட்டம் தக்கலை போலீஸ் நிலையத்தில் நேற்று மதியம் போலீசார் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் நிலையத்தின் மொட்டை மாடியில் இருந்து திடீரென வெடி சத்தம் கேட்டது. பட்டாசுகள் வெடிப்பதை போன்று தொடர்ந்து வெடித்து சிதறியபடி இருந்தன.
அப்போது போலீஸ் நிலையத்தின் கீழ் அறையில் இருந்த போலீசார் செய்வதறியாமல் திகைத்தனர். தொடர்ந்து வெடித்தபடி இருந்ததால் அவர்களால் மாடிக்கு செல்ல முடியவில்லை. மாடியில் மூடை, மூடையாக வைக்கப்பட்டிருந்த ஓலைபட்டாசுகள் தான் வெடிக்கிறது என்பதை போலீசார் அறிந்து கொண்டனர். இதற்கிடையே சத்தம் கேட்டு போலீஸ் நிலையம் முன்பு ஏராளமான பொதுமக்களும் திரண்டனர்.
மேற்கூரை சேதம்
மேலும் இதுபற்றி உடனடியாக தக்கலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பட்டாசுகள் வெடித்ததால் அந்த அறையில் இருந்த சில பொருட்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன. அந்த தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.
அப்போது வெடிக்காமல் இருந்த பட்டாசுகளை வீரர்கள் அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தினர். சிறிது நேரத்தில் அங்கு எரிந்த தீயும் முற்றிலுமாக அணைக்கப்பட்டது.
பட்டாசுகள் வெடித்ததில் போலீஸ் நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் பிளாஸ்டிக் ஷீட்டுகளால் ஆன கொட்டகையின் மேற்கூரை ஆகியவை சேதமடைந்தன. பட்டாசுகள் திடீரென வெடித்த சம்பவம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சூப்பிரண்டு பார்வையிட்டார்
மேலும் தீ விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தக்கலை போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-
தக்கலை போலீஸ் நிலையத்தில் வெடித்தது பட்டாசுகள் தான். கடந்த 2018-ம் ஆண்டு ஒரு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளை தக்கலை போலீஸ் நிலையத்தின் மாடியில் போலீசார் பாதுகாப்பாக வைத்திருந்தனர். அந்த பட்டாசுகள்தான் வெடித்துள்ளது. இந்த பட்டாசு வெடித்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து எந்தெந்த போலீஸ் நிலையங்களில் இதுபோன்று பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளதோ? அவற்றையெல்லாம் வெடிபொருள் குடோனுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் நீதிபதிகளிடம் உத்தரவுகளை பெற்று பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளை அழிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விசாரணை
அதே சமயத்தில் பட்டாசு வைக்கப்பட்ட கொட்டகைக்கு யாரும் சென்றார்களா? அல்லது மின்கசிவு காரணமாக பட்டாசுகள் வெடித்ததா? என்ற கோணத்திலும் போலீஸ் விசாரணை நடக்கிறது.