வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவர் கைது
வெம்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா வெங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், விவசாயி. அவர் காவேரிப்பாக்கத்தில் உள்ள மகள் சத்யா வீட்டுக்கு சென்று, மறுநாள் அவரின் வீட்டுக்கு திரும்பினார்.
வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை காணவில்லை. மர்மநபர் யாேரா திருடிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து பிரம்மதேசம் போலீசில் கிருஷ்ணன் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அதேபகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது அவர், கிருஷ்ணன் வீட்டில் தங்கநகையை திருடியதாக ஒப்புக்கொண்டார்.
மேலும் திருடிய நகையை அவர் வெம்பாக்கத்தில் உள்ள ஒரு கடையில் அடகு வைத்திருந்தார். அடகு வைத்த நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக பார்த்திபன் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பார்த்திபனுக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.