புகையிலை பொருட்கள் விற்க மாட்டேன் என்று கூறி உறுதிமொழி படிவம் கொடுத்துவிட்டு குட்கா விற்ற வியாபாரி போலீசார் அதிர்ச்சி

புகையிலை பொருட்கள் விற்க மாட்டேன் என்று கூறி உறுதிமொழி படிவம் கொடுத்துவிட்டு குட்கா விற்ற வியாபாரியால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனா்.

Update: 2021-12-11 16:48 GMT
நெல்லிக்குப்பம், 

கடலூர் அருகே நடுவீரப்பட்டு போலீசார் அந்த பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில், கடைக்காரர்களிடம் புகையிலை பொருட்களை விற்பனை செய்யமாட்டோம் என்று உறுதி மொழி ஏற்க செய்து, அது தொடர்பான படிவத்திலும் கையெழுத்து பெற்றனர்.  

அந்த வகையில்,  சி.என்.பாளையம் கடைவீதியில் உள்ள வியாபாரிகளும் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டு இருந்தனர். இந்த நிலையில்,  சி.என்.பாளையம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை  பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கடைகளில் சோதனை செய்தனர். அதில், ஒரு பெட்டிக்கடையில் அதேபகுதியை சேர்ந்த பத்மநாபன்(வயது 42) என்பவர் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. 

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 210 பாக்கெட் குட்கா மற்றும் ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 5 ஆயிரத்து 500 இருக்கும் என்று கூறப்படுகிறது.

 இவர் நேற்று முன்தினம் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, தடை செய்யப்பட்ட  புகையிலை பொருட்களை விற்பனை செய்யமாட்டேன் என்று உறுதிமொழி ஏற்று, அதற்கான படிவத்தில் கையெழுத்திட்டு கொடுத்தவர் என்பது தெரியவந்தது.

  ஒரே நாளில் உறுதி மொழியை உதறிதள்ளிவிட்டு, புகையிலை பொருட்கள் விற்பனையில் இறங்கியது போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது.

மேலும் செய்திகள்