கொடைக்கானலில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 452 கட்டிடங்களுக்கு நோட்டீஸ்
கொடைக்கானலில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 452 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
கொடைக்கானல்:
தமிழகத்தில் நீர்நிலைகள், ஓடை புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகங்களுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதுதொடர்பான அறிக்கைகளையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
அதன்படி, கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களின் சொத்து வரி, குடிநீர் இணைப்பு ரத்து செய்யப்படும் என்றும் நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக நகராட்சி ஆணையாளர் நாராயணன் உத்தரவின்பேரில் நகரமைப்பு அலுவலர் அப்துல் நாசர் தலைமையிலான ஊழியர்கள் நீர்நிலை மற்றும் ஓடை புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 452 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கும் பணியை தொடங்கினர்.
இதில் முதற்கட்டமாக ஏரிச்சாலை அருகே ஆற்று நீரோடை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நோட்டீஸ் கிடைக்க பெற்ற 7 நாட்களுக்குள் தகுந்த முகாந்திரம் கொடைக்கானல் நகராட்சிக்கு அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் முகாந்திரம் ஏதும் இல்லை என கருதி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி சார்பில் வழங்கப்பட்ட நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட சர்வேயின் அடிப்படையில் 452 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்ெதாடர்ந்து தற்போது நகர அளவையர் தலைமையில் ஆக்கிரமிப்புகளை அளவிடும் பணி தொடங்கியுள்ளது என்றனர்.