காங்கேயம்,
காங்கேயம் மற்றும் முத்தூர் பகுதியில் நடந்த முகாம்களில் 2,216 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
1,171 பேருக்கு தடுப்பூசி
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு விழிப்புணர்வுகளும், தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் காங்கேயம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பாக கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அரசு பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நேற்று காங்கேயம் நகர பகுதியில் உள்ள சத்யாநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திருப்பூர் சாலையில் உள்ள பாரதியார் அரசு நடுநிலைப்பள்ளி, தாராபுரம் சாலை களிமேடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மருத்துவமனை உள்பட 5 கொரோனா தடுப்பூசி மையங்களில் கொரோான தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் கொரோனா முதல் தவணை தடுப்பூசி 350 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 821 பேருக்கும் என மொத்தம் 1,171 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தபடி, நீ்ண் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
முத்தூர்
இதுபோல் முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் 14-வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் மருத்துவமனை வளாகம் உள்பட 9 இடங்களில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் முத்தூர் சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர், அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள், பணியாளர்கள், ஊராட்சி நிர்வாக பணியாளர்கள் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
அந்தவகையில் முத்தூர், சின்னமுத்தூர், ராசாத்தாவலசு, வேலம்பாளையம், வள்ளியரச்சல், மேட்டுப்பாளையம், ஊடையம், பூமாண்டன்வலசு ஆகிய வருவாய் பகுதிகளை சேர்ந்த நகர, சுற்று வட்டார கிராம பகுதி பொதுமக்கள் 1,045 பேருக்கு முதல், 2- வது தவணை கோவிஷீல்டு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது.
----