நல்லம்பள்ளி அருகே மது போதையில் தகராறு ஈட்டியால் குத்தி தந்தை படுகொலை தொழிலாளி கைது
நல்லம்பள்ளி அருகே மது போதையில் தகராறு செய்த தந்தையை ஈட்டியால் குத்தி கொலை செய்ததாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே மது போதையில் தகராறு செய்த தந்தையை, ஈட்டியால் குத்தி கொலை செய்ததாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மதுபோதையில் தகராறு
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள சாமிசெட்டிப்பட்டி மந்திரி கவுண்டன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது48). தறித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கிருஷ்ணவேணி என்ற மனைவியும், 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இதில் மூத்த மகன் நவீன்குமார் (26). இவர் தனியார் ஜவுளி நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர், தனது தந்தை வீட்டருகே மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். கோவிந்தசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
இதனால் அவர் தினமும் மது குடித்துவிட்டு வந்து தனது மனைவி மற்றும் மகன்களிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதன்காரணமாக கிருஷ்ணவேணி கணவரிடம் கோபித்து கொண்டு பென்னாகரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தசாமி நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் மகன் நவீன்குமார் வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறு செய்துள்ளார்.
குத்திக்கொலை
அப்போது உனது தாயார் வெளியே சென்றதற்கு நீ தான் காரணம் எனக் கூறி மகன் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவீன்குமார் ஈட்டியால் தனது தந்தை கோவிந்தசாமியை குத்தி உள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தொப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட கோவிந்தசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தொழிலாளி கைது
இந்தநிலையில் நவீன்குமார் சாமிசெட்டிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுதாகரனிடம் சரண் அடைந்தார். இதுகுறித்து அவர் தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று நவீன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, எனது தந்தை கோவிந்தசாமி தினமும் மது குடித்து விட்டு வந்து தகராறு செய்து வந்தார். அதேபோல் நேற்று முன்தினமும் மது குடித்து விட்டு வந்து தகராறு செய்ததுடன், எனது வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதால் ஆத்திரமடைந்து ஈட்டியால் அவரை குத்தி கொன்றதாக வாக்குமூலத்தில் கூறினார்.
மதுபோதையில் தகராறு செய்த தந்தையை, மகனே ஈட்டியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.