வலிமையான இந்தியாவை இளைஞர் சக்தியால் மட்டுமே உருவாக்க முடியும் - கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேச்சு

வலிமையான இந்தியாவை இளைஞர் சக்தியால் மட்டுமே உருவாக்க முடியும் என்று கவர்னர் தாவர்சந்த் கெலாட் கூறினார்.

Update: 2021-12-10 23:10 GMT
பெங்களூரு:

நாட்டின் எதிர்காலம்

 "பிரசிடென்ட் ஆர்கனிசேசன்" என்ற அமைப்பு சார்பில் சுதந்திர தின பவள விழா பெங்களூரு கவர்னர் மாளிகையில் உள்ள விருந்தினர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

  வலிமையான இந்தியாவை இளைஞர் சக்தியால் மட்டுமே உருவாக்க முடியும். இன்றைய இளைஞர் பலமே நமது நாட்டின் எதிர்காலம். அதனால் இளைஞர்களை சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராக்க வேண்டும். இளைஞர்கள் விழிப்புணர்வு அடைந்து உழைத்தால் மட்டுமே நமது நாடு வளர்ச்சி பாதையில் பயணிக்கும். நல்ல கல்வியை பெற்று நல்ல இந்தியாவை உருவாக்கும் கடமை இளைஞர்களுக்கு உள்ளது.

தங்க பறவை

  கலந்துரையாடல், திறன் மேம்பாடு, தன்னம்பிக்கை, பொறுமை போன்றவற்றை இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அனைத்து துறைகளிலும் புரட்சி வேகத்தில் சாதனை புரிய தயாராக வேண்டும். வேலை தேடுவதற்கு பதிலாக வேலை வழங்குபவர்களாக மாற வேண்டும். இந்தியாவை உலகின் குரு மற்றும் தங்க பறவை என்று அழைத்தனர். நமது நாட்டின் கல்வி, அறிவாற்றல், அறிவியல், பொருளாதாரம், தொழில்துறை போன்றவை வளமானதாக இருந்தது.

  ஆரியபட்டா, பிரம்மகுப்தா, தன்வந்திரி போன்ற மகான்கள் இந்த புண்ணிய பூமியில் பிறந்தனர். அவர்களின் பணிகளால் நமது நாடு வளர்ந்தது. கடந்த 75 ஆண்டுகளில் நமது நாடு ஒவ்வொரு துறையிலும் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிப்போம், டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட திட்டங்களால் வலுவான இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதன் மூலம் வேலை வாய்ப்புகள் பெருகுகிறது.

சாதகமான அம்சங்கள்

  இளைஞர்கள் நேர்மறையான எண்ணங்களுடன் வேலை பெறுவதுடன் வேலை வாய்ப்புகளை உருவாக்குபவர்களாகவும் முயற்சி செய்ய வேண்டும். தொழில்முனைவோருக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. இந்தியாவில் வனம், நீர் போன்ற இயற்கை வளங்கள் அதிகமாக உள்ளன. தொழில் முதலீடுகளுக்கு நல்ல சாதகமான அம்சங்கள் குவிந்து கிடக்கின்றன.

  பிரதமராக இருந்த வாஜ்பாய், வளர்ச்சி, ஏழை மக்களின் நலனில் அதிக அக்கறை காட்டினார். அவரது பாதையிலேயே நாம் பயணிக்க வேண்டும். பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவும் தொழில்நுட்பம் நமது நாட்டில் உள்ளது. பிரதமர் மோடி டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க பாடுபட்டு வருகிறார். அதன் மூலம் ஊழலை ஒழிக்கவும் அவர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

பங்கு முக்கியமானது

  கர்நாடகம் ஞானம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் மென்பொருள் உற்பத்தியின் மிகப்பெரிய மையமாக திகழ்கிறது. இங்கு அதிக எண்ணிக்கையில் உள்ளன. நாட்டின் வளர்ச்சியில் கர்நாடகத்தின் பங்கு முக்கியமானது.
  இவ்வாறு தாவர்சந்த் கெலாட் பேசினார்.

மேலும் செய்திகள்